நான்-1. மழை இரவு. வானம் மேலே பொத்துக்கொண்டது போல தெரிந்தது. பேய்க் காற்று. மின்சாரம் போய் நெடுநேரமாகிவிட்டது போலும்.எல்லா பிம்பங்களும் கருப்புச்சாம்பல் நிறத்தில். அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் மொட்டை மாடியில்,தனித்திருந்தது அந்த ஒற்றை அறை.அறைக்கு வெளியே சரிந்திருந்த பிளாஸ்டிக் முன்கூரை காற்றில் அலறிக்கொண்டிருந்தது.காற்று நீராகவே மாறியிருந்தது.மழையின் பேரிரைச்சலையும்,காற்றின் பரிதவிப்பையும் தவிர வேறு சத்தங்களை கேட்க முடியவில்லை.அந்த அறையின் தனிமையில் தொண்டை வறண்டிருந்தது சிவராமனுக்கு.
நீரின் சொதசொதப்பு மனதிலும் இருந்தது. அருவருப்பு.
இவ்வளவா...எப்படி?..ஏன்? எதிரி நிலை ஒற்றையாக இருந்தால் கூட பலத்தை பயன்படுத்திப் பார்க்கலாம். இப்பொழுது விரலைகூட நகர்த்த முடியும் என்ற நம்பிக்கையில்லை. வாழ்க்கை முடிந்துவிடப்போகிறதா. முடிந்துவிட்டதா.தனிமை நீர் ஊறி கனத்தது.தூங்கப்போகும் பொழுது எல்லாம் சரியாகத்தான் இருந்தன. மழையின் கூத்தாட்டம் நடுவில் எழுப்ப, புரண்டு எழுந்த பொழுது..உடம்பின் கீழே ஏதோ நசுக்கப்படும் நசநசப்பு..பிசுபிசு என்று நீராக..தொட்டு முகர்ந்த பொழுது துர்நாற்றம்..கண் இருட்டை பழகிக்கொண்டபின் தெரிந்தது....அறையின் எல்லா திசைகளிலும் எங்கும் கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருந்தன.சுவர்களெங்கும்,புஸ்தக அடுக்குகளெங்கும்,தொலைகாட்சி பெட்டி,கட்டில்,தொலைபேசி,தொங்கும் உடைகள்,காலி கோப்பைகள், அவன் உடம்பின் மீதும் சிறிதும் பெரிதுமாக..படை படையாக.. கருகருவென்று.. அப்பியிருந்தன. அந்த பூச்சிகளுடன் சேர்ந்து அவனும் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான்.
நான்-2. எதிர் நிலத்தில் மதிய வெயில் கண்குத்தியது.எங்கோ போகும் பஸ் அந்த பஸ்ஸடாப்பைவிட்டு கிளம்பிச்சென்றபோது பரவிய டீசல் மணம் மூக்கிற்கு இசைவாக இருந்தது.கண்மாயின் மேடேறும் இடத்தில்
பஸ்ஸடாப்.சாலை முழுவதும் புளியமரங்களின் நிழல்.எதிர்புறம் இருந்த நிலம் நெல் அறுத்த கணுக்களாய்..உரசினால் சரசர என்று சத்தம் வரும்.மேலே நிமிர்ந்து பார்த்தான். புளியமரங்கள் உயரமாக இருந்தன.அவற்றின் நடுவே குட்டையாக பருத்த ஒரு புளியம். அந்த புளியத்தின் வலதுபுறமிருந்த ஒரு அடிக்கொப்பில் அவனுடைய அம்மா உட்கார்ந்திருந்தாள்.அவளருகே குயில் ஒன்று.அவளும் குயிலும் பேசிக்கொண்டிருந்ததில் தீவிரம் தெரிந்தது. அவனைப்பற்றித்தான் இருக்கும்.
கையில் வைத்திருந்த சர்டிஃபிகேட் ஃபைல் ஒல்லியாகயிருந்ததால் முஷ்டியை மடக்கி பிடிக்க சிரமமாய் இருந்தது. மார்போடு அணைத்தால் பெண்பிள்ளை போலிருக்கும்.காலையில் 5 மணிக்கு புறப்பட்டது.கிளம்பும்பொழுது எப்படியும் இந்த வேலை கிடைக்கவேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. இந்த ஊரில் வந்து இறங்கிய பொழுது காலை 9 மணி. வழிகேட்டு நடக்க..ஒற்றையடிப்பாதை.இருபுறமும் ஓங்கி வளர்ந்த கருவேலங்கள்.பாதை நீண்டு கொண்டே சென்றது.முடியவே போவதில்லை என்று நினைத்தபோது..தனித்து நின்றிருந்தது அந்த ஃபேக்ட்ரி. 2 மணி நேர காத்திருப்பு, 1 மணி நேர சந்திப்பிற்குப் பின்னே வெளியே வந்தான். இப்பொழுது அவனுக்கு திரு.ராமச்சந்திரன் பற்றிய சில விஷயங்களும்,திரு.ராமச்சந்திரன் அவனைப்பற்றி என்ன கருதுகிறார் என்பது பற்றி சில அனுமானங்களும் தெரிந்திருந்தன. அவருடைய பெண் அமெரிக்க மாப்பிள்ளைக்கு வாக்கப்படப்போவதை சொன்னபோது..பார்..நீ ஏன் அமெரிக்கா போகவில்லை..இப்பொழுது யாரோ ஒருவனுக்கு கட்டிக்கொடுக்க வேண்டியிருக்கிறது..என்று சொல்கிறாரோ என்று நினைத்தான்.மற்றும் அவனைப்போன்ற ஊமைகள் ஊரை கெடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்ற அவர் கருத்து அவனுடைய தந்தையின் கருத்தை ஏறக்குறைய ஒத்திருந்தது. நாளை வரச்சொல்லியிருக்கிறார்.அவன் போகவேண்டிய பஸ் வந்து படியில் கால் வைக்கும் பொழுது வேண்டினான்..கடவுளே,தயவு
செய்து இந்த வேலை எனக்கு கிடைக்காமல் செய்துவிடு. பஸ் நகர்ந்த பொழுது..சன்னல் வழியே..அவனுடைய அம்மா சிரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.குயில் ஏதோ சொல்லியிருக்க வேண்டும்.அவனுக்கு பசித்தது.
Sunday, February 21, 2010
Subscribe to:
Posts (Atom)